-திவ்யா துவேதி, ஷாஜ் மோகன் மற்றும் ஜே ரெகு

{இரண்டு}

‘இந்து’ என்ற சொல்லை முதன்முதலில் கி.மு ஆறாம் நூற்றாண்டில் அகாமனிசிய பாரசீகர்கள் துணைக்கண்டத்தின் வடமேற்கில் உள்ள சிந்து நதியைச் சுற்றியுள்ள நிலப்பரப்பை குறிப்பிடுவதற்கு பயன்படுத்தினார்கள். வரலாற்றாசிரியர் சஞ்சய் சுப்ரமணியத்தின் கூற்றுப்படி தக்காணத்திற்கு அப்பாற்பட்ட நிலங்களில் இந்த சொல் பயன்படுத்தப்படவில்லை. யுரேசிய ஸ்டெப்பி பகுதியிலிருந்து துணைக்கண்டத்திற்கு குடிபெயர்ந்த, தம்மை ‘ஆரியர்கள்’ என்று அழைத்துக் கொண்ட மக்கள் கூட்டத்தால், வேதங்களாக தொகுக்கப்பட்ட இலக்கியங்கள் கி.மு 1500 முதல் கி.மு 500 வரையான காலப்பகுதியிலே இயற்றப்பட்டன. புராதன நூலான மனுஸ்மிருதி புலம்பெயர்ந்த ஆரியர்களை இந்தியாவில் உள்ள விந்திய மலைகளை கடப்பதை விட்டும் தடை செய்தது.

கி.மு நான்காம் நூற்றாண்டில் அலெக்சாண்டரின் இராணுவம் ‘சிந்து’ பகுதியை சுற்றியுள்ள பகுதியை ;இந்துஸ்/Indus என்ற பெயரால் குறிப்பிட்டது. இச்சொல்லாடலில் இருந்தே ‘இந்தியா’ என்ற நவீன பெயர் உருவானது. ‘அல்ஹிந்த்’ என்ற அரேபிய மாற்றுச்சொல்லும் அதே நிலப்பரப்பை குறிக்கிறது. மேலும் இந்த பெயரிலிருந்தே ‘இந்து’ என்பது பயன்பாட்டிற்கு வந்தது. வரலாற்றிசிரியர் ரிச்சர்ட் ஈட்டன் இந்த பெயர் 1350 வரை துணைக்கண்டத்தின் ஒரு பகுதிக்கு தெளிவற்ற ஒரு அடையாளமாக பயன்படுத்தப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

ரோமிலா தாப்பரின் கூற்றுப்படி பதினைந்தாம் நூற்றாண்டிற்கு முன்னர் ஒரு மதத்தின் பெயராக ‘இந்து’ என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை. முதன்முதலில் பதினெட்டாம் நூற்றாண்டில் கிழக்கிந்திய கம்பெனியின் அரச ஊழியர்கள் மற்றும் வணிகர்களால் தங்களுக்கென ஒரு மதத்தை குறிப்பிடுவதற்கு இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டது.

இந்த மாறுபட்ட கையாள்கைகள் அனைத்தும் பத்தொன்பதாம் நூற்றாண்டிற்கு முன்பிருந்தே ‘இந்து’ என்ற சொல்லை பயன்படுத்தியமைக்கான காரணிகள் எதுவும் வரலாற்றில் இல்லை என்பதை காட்டுகிறன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் கூட காலனித்துவ அரசாங்கத்தின் கீழ் அரசியல் மற்றும் நிர்வாக செயல்முறைகளில் பற்றி பேசும் போது மட்டுமே இது பயன்படுத்தப்பட்டதன் மூலம் படிப்படியாக நடைமுறையில் வந்தது.

கடவுள் நம்பிக்கை அல்லது கடவுளின் இருப்பை கேள்விக்குட்படுத்தல் ஆகியவை சமூகம் மற்றும் அரசியலில் இருந்து விலகி இருக்க முடியும். ஆனால் ஒரு நம்பிக்கை அமைப்புமுறையானது, சடங்குகள் மற்றும் மரபுகள் வடிவில் காலம் நேரம் தாண்டிய ஒழுக்கத்தை நிலைநாட்ட மக்களின் நடத்தையை கட்டுப்படுத்தும்போது அது ஒரு மதமாக வரையறுக்கப்படுகிறது. ஒரு புனிதமான நாட்காட்டியானது மதக்குழுமத்தின் வருடாந்த சடங்குகள் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்கிறது. மதம் என்பதை அதிகார அமைப்புகளில் இருந்து பிரிக்க முடியாது. ‘நம்பிக்கையை’ ஒழுங்குபடுத்துவதன் மூலம் இது சட்டபூர்வமான அதிகாரத்தை வழங்குகிறது. சமய நம்பிக்கை மற்றும் பழக்கவழக்கங்களுக்கான சீர்மை மற்றும் ஒழுங்குமுறையை உறுதி செய்துகொள்ள ஒரு மதத்திற்கு தொடர்ச்சியாக அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது.

அப்படியானால் ஒரு மதத்தை பற்றி பேசுவதென்பது, தனித்துவமான குணாதிசயங்களால் அடையாளப்படுத்தப்பட்டு ஒரு அரசியலமைப்பிற்குள் நின்று மக்களால் கடைபிடிக்கப்படும் ஒன்றைப் பற்றி பேசுவதாகும். சமூகங்கள் ‘மதம்’, ‘பிரிவு’ மற்றும் ‘வழிபாட்டு முறை’ ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாடுகளால் முதலீடு செய்யப்படுகின்றன என்பது இந்த வகைப்படுத்தல்களின் நிர்வாக மற்றும் அரசியல் தன்மையை காட்டுகிறது. ஏனென்றால் இவ் வேறுபாட்டுக்கு அமைய சிவில் சட்டங்கள் மாறுபடுகின்றன. அரசியல் அமைப்பு முறையாக நிறுவப்பட்ட அளவுகோல்களின் அடிப்படையில் முறையான அங்கீகாரத்தை வழங்காத வரையில் அறிவியல் அல்லது டிங்கோயிசம் (Dinkoism) போன்ற தனித்துவமான நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகளைக் கொண்டிருப்பது கூட பயனற்றது. இந்தியாவில் லிங்காயத்துகள் தங்கள் நம்பிக்கைகளுக்கு ஒரு மதத்தின் அந்தஸ்த்தைப் பெற எதிர்கொள்ளும் சவால்களை நாம் நேரில் காணலாம்.

மதத்தின் மீதான நமது கரிசனைகளை தொடங்கிவைத்த ஐரோப்பியர்கள் பதினேழாம் மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டுகளில் ‘மதம்’, ‘தேசம்’ மற்றும் ‘இனம்’ ஆகியவற்றை ஒன்றுக்கொன்று மாற்றமாக பயன்படுத்தினர். கொலம்பியனுக்குப் பின்னரான ஐரோப்பியரல்லாத மக்கள் மற்றும் அவர்களின் நடைமுறைகளின் கண்டுபிடிப்புடன் கிறிஸ்தவ இறையியலாளர்கள் மதங்களைப் பற்றி ஆராயத்தொடங்கினர். நீண்ட காலமாக கிறிஸ்தவம் மட்டுமே ஒரு உண்மையான மதமாக கருதப்பட்டது. அரச நிர்வாக விடயங்களில் மதம் என்ற தலைப்பையும் உள்ளடக்கிய பின்னர் மதத்தை வரையறுப்பதற்கும் வெவ்வேறு மதக்குழுக்களின் நடைமுறைகளை வேறுபடுத்துவதற்குமான முயற்சிகள் இறையியல் விவாதங்களுக்கு அப்பால் முதன்மைப்படுத்தப்பட்டன. இவ்விளக்கப் பிரிவுகள் அரச சட்ட அமைப்புமுறையை உருவாக்குவதற்கு முக்கியமான ஒன்றாக மாறின. உதாரணமாக பிரெஞ்சுப் பேரரசில் யூதர்;கள், கிறிஸ்தவர்கள் மற்றும் அடிமைகளுக்கு இடையிலான திருமணம் மற்றும் சொத்து உறவுகளை இனவாதியான கோட் நோயர் மாற்றியமைத்தான். இவ்வகையில் பல்வகையான குழுக்களின் மதங்களை அரசு தீர்மானித்து, கணக்கிட்டு அதற்கேற்ப நிர்வாகம் செய்ய வேண்டிய தேவை எழுந்தது.

முகலாயர் காலத்தில் துணைக்கண்டத்திற்கு வந்த ஐரோப்பிய மிஷனரிகள் உலகில் நான்கு மதங்களாக கிறிஸ்துவம், இஸ்லாம், யூதம் மற்றும் ஜென்டில்ஸ் (Gentiles) நம்பிக்கைகள் இருப்பதாக கருதினர். துணைக்கண்டத்தின் மத மரபுகளை அவர்கள் வேறுபடுத்தினாலும் கிறிஸ்தவம், இஸ்லாம் மற்றும் யூத மதங்களின் கடவுள்களை வணங்காத அனைவரையும் சாத்தானை வழிபடும் ஹெஅதென்ஸ் (heathens) அல்லது ஜென்டில்ஸ் (Gentiles) கருதினர். ஸ்பானிய மிஷனரிகள் ஜென்டில்ஸ் (Gentiles) மதமென அவர்கள் கருதிய பலதெய்வ வழிபாடு, சிலை வழிபாடு மற்றும் சாதி ஒழுங்குகள் போன்ற பல்வேறு நடைமுறைகளை ஆய்வு செய்தனர். இது விரைவில் ‘ஜென்டூ’ (Gentoo) ஆனது.

ஆரம்பகால பிரித்தானிய கீழைத்தேய மொழிப்புலமையாளர்கள் இந்த வார்த்தையை பயன்படுத்தினர். 1770களின் முற்பகுதியில் வங்காளத்தின் ஆளுனர் வாரன் ஹேஸ்டிங்ஸ் சமஸ்கிருத ‘சாஸ்டர்கள்’ அல்லது சாஸ்திரங்களில் இருந்து ஒரு சட்டவிதிமுறையை தேர்ந்தெடுத்து தொகுக்க பிராமணர்களின் குழுவை நியமித்தார். மேலும் அதனை பாரசீக மொழிக்கும், பின்னர் பாரசீகத்திலிருந்து ஆங்கிலத்திற்கும் மொழிபெயர்க்க வைத்தார். இத் தொகுப்பு முஸ்லிமல்லாதவர்களை குடிமையியல் சட்டத்தின் கீழ் நிர்வகிக்க பயன்படுத்தப்பட்டது. 1776 ஆம் ஆண்டில் பிரித்தானிய கீழைத்தேய மொழிப்புலமையாளர் நதானியல் பி. ஹெல்ஹெட் ஆங்கில மொழிபெயர்ப்பை நிறைவு செய்து ‘ஜென்டூ சட்டவிதிமுறை’ அல்லது ‘பண்டிதர்களின் ஆணைகள்’ என வெளியிட்டார்.

இந்த மாறுபட்ட பயன்பாடுகள் மதமோ அதனை பின்பற்றுபவர்களோ இருந்தமையை குறிக்கவில்லை. முகலாய ஆட்சிகளின் காலத்திலிருந்தும் காலனித்துவ நிர்வாகத்தின் ஆரம்ப நாட்களிலிருந்தும் பெரும்பாலான ஐரோப்பிய பயணிகளின் பதிவுகளின்படி அவர்கள் உயர் சாதியினரின் குறிப்பாக பிராமணர்களின் மத மரபுகளை மட்டுமே அறிந்து கருத்தில் கொண்டிருந்தினர். ஐரோப்பிய காலனித்துவவாதிகளின் இடைத்தரகர்கள் பெரும்பாலும் பிராமணர்களாக இருந்ததால் பிராமணர்களின் நம்பிக்கைகள் பெரும்பாலும் ஜென்டில்ஸ் (Gentiles) மதத்தை சார்ந்ததாக தவறாக கருதப்பட்டன.

துணைக்கண்டத்தில் ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்னர் ஒரு இந்திய மதம் ஏன் அடையாளம் காணப்படவில்லை என்பது சிந்திக்கப்பட வேண்டியது. இதற்கு பல காரணங்களை கூறலாம். அவற்றில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், சாதி அமைப்பு சில மக்களை வேறு சிலருக்கு ஒதுக்கப்பட்ட பாலியல், சமூக மற்றும் கலாச்சார நடைமுறைகளில் இருந்து விலக்குவதை சார்ந்துள்ளது. துணைக்கண்டத்தின் பல்வேறு சாதிகள், பிரிவுகள் மற்றும் பழங்குடியின மக்களை ஒரு மதக்குழுவை சேர்ந்தவர்களாக அடையாளப்படுத்தும் கருத்து இருந்தமைக்கு இன்றும் எந்த ஆதாரமும் இல்லை. வரலாற்றாசிரியர் சாண்ட்ரியா பி. ப்ரீடாக் 1980இல் ஒரு கட்டுரையில் எழுதியது போல், ‘இந்தியர்கள் எப்போதுமே தங்களை சாதியால் அடையாளப்படுத்திக் கொள்வார்கள்.’ வேறு முறையில் சொல்வதாயின் இந்திய துணைக்கண்டத்தில் மாறாத ஒரு விடயம் சாதிய ஒடுக்குமுறை மட்டுமே.

சாதி என்பது துணைக்கண்டத்தில் உள்ள மக்களைத் தொகுத்துப் பிரிக்கும் ஒரு நிறுவனக் கொள்கையாகும். காலனித்துவத்திற்கு முந்தைய காலத்தில் பிராமணர்களும் மற்ற உயர் சாதியினரும் பெரும்பான்மையான தாழ்த்தப்பட்ட மக்களை மிலேச்சா (mlechcha) மற்றும் தர்மஹினா (dharmahina) என்று கருதினர். எனவே சாதியின் பார்வையில், எல்லா மக்களையும் உள்ளடக்கிய ஒரு மதம் என்பது நினைத்துப்பார்க்க முடியாததாக இருந்திருக்கும்.

எனினும் பிரித்தானிய அறிஞர்கள் இந்திய மக்களின் மதத்தை விவரிக்க ‘இந்து’ என்ற வார்த்தையை தொடர்ந்தும் பயன்படுத்தினர். உண்மையில் அவர்கள் ஆதிக்க சாதிகளின் கலாச்சார நடைமுறைகள் மற்றும் குறியீடுகளை மட்டுமே குறிப்பிட்டார்கள். வங்காளத்தில் சுரங்க வேலைகளுக்காக கல்கத்தாவில் பணியமர்த்தப்பட்ட கீழைத்தேய மொழிப்புலமையாளர் மற்றும் உலோகவியலாளரான எச்.எச்.வில்சன் 1819ஆம் ஆண்டு சமஸ்கிருத அகராதியை உருவாக்கினார். அதில் ‘இந்து’ என்ற வார்த்தை அடங்கியிருந்தாலும் அது ஒரு மதத்தை குறிக்கவில்லை. 1827 ஆம் ஆண்டு வில்சன் வெளியிட்ட ‘இந்துக்களின் திரையரங்குகளின் மாதிரிகளை தேர்ந்தெடுத்தல்’ என்ற ஆக்கத்தில் ‘இந்து’ என்பது துணைக்கண்டத்தில் உள்ள இஸ்லாமியர் அல்லாத மக்கள் மற்றும் கலாச்சாரங்களைக் குறிக்கிறது. அவர் துணைக்கண்டத்தின் ‘பிரிவுகள்’ பற்றி வழங்கிய இரு விரிவுரைகள் 1840இல் ‘இந்துக்களின் மதப்பிரிவு வடிவம்’ என இணைத்து வெளியிடப்பட்டன. அதில் அவர் தனித்துவமான ஆனால் தொடர்புகளுடைய பிரிவுகள் மற்றும் நம்பிக்கைகளை விவரிக்கிறார். இந்த பிரிவுகளின் தொடர்பு கூட பெரும்பாலும் வைஷ்ணவர்கள், சைவர்கள் மற்றும் பசுபதர்கள் போன்ற ஆதிக்க சாதி குழுக்களுக்கு உரியது. ‘இந்து’ என்ற பதத்தின் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பயன்பாடுகளில் முதன்மையாக உயர்சாதி நம்பிக்கைகளை காணலாம்.

முதன்முறையாக 1850களில் ‘இந்து’ என்ற வார்த்தை நிர்வாக வேலைகளில் குறிப்பாக 1850ஆம்; ஆண்டின் சாதி ஊனமுற்றோர் அகற்றும் சட்டத்தில் ஒரு மதத்தை குறித்து பயன்படுத்தப்பட்டது. அதுவரை காலனித்துவ இனவியலாளர்களுக்கு இது வெறும் விளக்கச் சொல்லாக இருந்தது. ‘இந்து’ என பெயரிடப்பட்ட மக்கள் தங்களை அவ்வாறு அடையாளப்படுத்திக்கொள்ளவோ அந்த மதத்தை பின்பற்றுபவர்களோ இருக்கவில்லை. இந்த வார்த்தையின் மட்டுப்படுத்தப்பட்ட பயன்பாடு பூர்வீக மக்களின் வாழ்க்கையில் கணிசமான விளைவுகளை ஏற்படுத்தாமல் இருந்தது. மேல்சாதி உளவாளிகள் தங்களது நம்பிக்கை கோட்பாடுகளால் ‘இந்து’ என்ற சொல்லாடலை ஆங்கிலேயர்களுக்கு அறிமுகப்படுத்தியதன் பிற்பாடு அதே ‘இந்து’ மதம் தாங்கள் அடிமைப்படுத்தி, சுரண்டி, ஒதுக்கிவைத்த ஒடுக்கப்பட்ட சாதியினருடன் பகிர்ந்து கொள்ளப்படுவதை உணர்ந்து கொண்டனர். அவர்கள் அப்போது இந்த வார்த்தை பயன்பாட்டை எதிர்த்து வேறு மாற்றுப் பெயர்களை தேடத்தொடங்கினர். இதன்மூலம் உயர்சாதியினர் தங்களை ஒடுக்கப்பட்ட சாதியினரிடம் இருந்து வேறுபடுத்தி தனி பிரதிநிதித்துவம் தேடலாம் என கருதினர்.

ஒடுக்கப்பட்ட சாதியினர், இஸ்லாமிய அல்லது கிறிஸ்தவ மதத்திற்கு மாறுவதற்கான சட்டத்தின் கீழ் அவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் ‘சாதி ஊனமுற்றோர் அகற்றும் சட்டம்’ ஆனது மேல்சாதியினருக்கு அதிர்ச்சியாக இருந்தது. வெகுஜன மதமாற்றங்களின் மூலம் தங்களின் ஆயிரக்கணக்கான ஆண்டுகால அடக்குமுறையிலிருந்து தப்பிக்க ஒடுக்கப்பட்ட மக்கள நவீன நீதித்துறை முறையை பயன்படுத்துகின்றனர் என்பதை சட்டம் தெளிவாக குறிப்பிடுகிறது. சட்டம்; ‘இந்து’ என்ற சொல்லை பயன்படுத்தியதற்கு ஆதிக்க சாதியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பிரபல பிரசங்கியான விஷ்ணுபுவா பிரம்மச்சாரி ‘இந்து’ என்ற வார்த்தையை மிலேச்சா என்று கண்டித்தார்.

வீணா நரேகல் என்ற அறிஞரின் கருத்துப்படி பிரம்மச்சாரி, தனது ஆக்ரோஷமான பேச்சுத்திறமையால் பெரும் கூட்டத்தை ஈர்த்தார். ஆவர் 1864இல் ‘வேதோக்த தர்மப்பிரகாசம்’ அல்லது வேதங்களுக்கு ஏற்ற தர்மம் என்ற தலைப்பில் ஒரு படைப்பை எழுதினார். ‘இந்து தர்மம்’ என்பதற்கு பதிலாக ‘வேதோக்த-தர்மம்’ என்ற சொல்லை அவர் விரும்பினார். அக்காலகட்டத்தில் பல ஆதிக்க சாதி தலைவர்கள் ஐரோப்பிய காலனித்துவ சக்திகளின் ஆதரவைப் பெறுவதற்கு வேதங்களை பயன்படுத்த முயன்றனர்.

ஐரோப்பியர்கள் வேதங்களை தெரிந்த அளவுக்கு இந்தியாவைப் பற்றி வெகுவாக அறிந்து வைத்திருக்கவில்லை. வேதங்களின் இலக்கியத் தொகுப்பு சுமார் இரண்டாயிரமாண்டுகளாக துணைக்கண்டத்தில் நிலைத்திருந்தது என்பது ஒரு புதிராக இருந்தது. முக்கியமாக ஐரோப்பிய அறிஞர்கள் ‘ஆரியர்களால்’ ஈர்க்கப்பட்டனர். இவர்கள் முன்னர் துணைக்கண்டத்திற்கு வெளியே யூரேசிய ஸ்டெப்பியில் இருந்து குடியேறியவர்கள் மட்டுமன்றி ஒரு காலத்தில் தங்களது தாய் மொழிக்கு நெருக்கமான ஒரு மொழியை பேசியவர்கள்.

ரிக் வேதத்தின் ‘ஆரிய’ கலாச்சாரம் இன்றைய பாகிஸ்தானில் வெகு காலத்திற்கு முன்பே முடிவுக்கு வந்தது. ரிக் வேதம் மற்றும் யஜர் வேதம் அவற்றின் படைப்பாளர்கள் வெளியேறிய நிலத்தின் மீது ஆர்வம் கொண்டுள்ளன. அது துணைக்கண்டமல்ல. உதாரணமாக வேத சடங்கு ‘அக்னிசயனா’ வடமேற்கில் தாயகத்திலிருந்து தென்கிழக்கில் யூரேசிய ஸ்டெப் நோக்கி நகர்வதைக் காட்டும் வரைபடத்தை கொண்டுள்ளது. உயர் சாதியினர் அரசியல் செல்வாக்கினை பெற துணைக்கண்டத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள வேறொரு நிலத்தின் மீது நாட்டம் கொண்ட நூல்களின் ‘அதிகாரம்’ மற்றும் ‘மதிப்பை’ பயன்படுத்த தொடங்கினர். ஆங்கிலேயர்களுடன் கூட்டுசேர்ந்துகொள்ள உயர்சாதித் தலைவர்கள் இந்தப் புதிய மதத்தை அவர்களுக்கு பிடித்தமாக மாற்ற முயன்றனர். பிரம்மச்சாரி இந்த நோக்கத்தில் அவ்ரோபிந்தோ, தயானந்தா சரஸ்வதி மற்றும் விவேகானந்தா ஆகியோருக்கு முன்னோடியாக இருந்தார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற உயர்சாதித் தலைவர்களைப் போலவே பிரம்மச்சாரியும் காலனித்துவ நிர்வாகம் ஏற்கனவே குற்றமாக்கிய உடன்கட்டையை(சதி) எதிர்த்து நிபந்தனைக்குட்பட்ட விதவை மறுமணத்தை ஆதரித்தார். வேத அல்லது ஆரிய முன்னோர்களின் இறைச்சி உண்ணும் நம்பிக்கைகளுடன் முறண்பட்டாலும் கூட அவர் சைவத்தை வலியுறுத்தினார். பிரம்மச்சாரி வேத இயற்பியல், வேத இரசாயனம் மற்றும் வேத காலப்பயணம் போன்றவற்றை ஆதரித்தார். சார்ள்ஸ் டாவினுக்கு முன்பே பரிணாம வளர்ச்சியின் கருத்தை ஆரியர்கள் கண்டுபிடித்ததாக விவேகானந்தர் கூறினார். ‘வேதம் அறிவியலின் உண்மைகளையும் மதத்தின் உண்மைகளையும் கொண்டுள்ளது என்ற தயானந்தாவின் கருத்தில் எந்த ஒரு புதினமும் இல்லை’ என அவ்ரோபிந்தோ எழுதினார். ‘நவீன உலகம் முழுவதுமே அறியாத அறிவியலின் உண்மைகளை வேதம் கொண்டுள்ளது என்ற எனது நம்பிக்கையையும் சேர்த்துக் கொள்கிறேன்’ என்றும் கூறினார்.

வேதங்களின் மீதான முக்கியத்துவத்தை உயர்சாதியினர் ஆங்கிலேயர்களுடன் கூட்டணி வைத்துக் கொள்ளவும் காலனிய எஜமானர்கள் தங்கள் அதிகாரத்தில் சிலவற்றை பகிர்ந்து கொள்ளவும் பயன்படுத்தினர். 1893இல் முன்னாள் பிரித்தானிய காலனியான பாராளுமன்றத்திற்கு எழுதிய ஒரு திறந்த கடிதத்தில் மோகன்தாஸ் காந்தி உயர்சாதி இந்தியர்களை ‘ஆரியர்’ என்று விவரித்தார்.

‘ஆங்கிலேயர்களும் இந்தியர்களும் இந்தோ-ஆரியர்கள் என்று அழைக்கப்படும் ஒரு பொதுவான கூட்டத்திலிருந்து தோன்றியவர்கள் என்பதை நான் சுட்டிக்காட்ட துணிகிறேன்’ என்று காந்தி எழுதினார். ‘இந்த பொதுவான இன தோற்றத்தின் மூலம் விதி இவர்களை ஒன்றுசேர்த்துள்ளது. ஆங்கிலேயர்களின் கையில் இந்தியர்களின் விதியை வைத்துள்ளது’ என்று அவர் வலியுறுத்தினார்.

இதற்கிடையில் தயானந்த சரஸ்வதி தனது சொந்த பழங்கால மதமான ‘ஆர்ய-தர்மா’ என்றழைக்கப்படும் மதத்தை கட்டியெழுப்பினார். அது வேதங்களை மட்டுமே அடிப்படையாக கொண்டது மட்டுமன்றி பின்னர் உருவாக்கப்பட்ட பிராமணிய வேதத்தின் மறுபகுதிகளை நீக்கியது. பேனாரஸின் மரபுவழி பிராமணர்கள் தயானந்தாவை ஒரு அச்சுறுத்தலாக கண்டு, சனாதர்ம தர்மம் அல்லது நித்திய ஒழுங்கை கிறிஸ்தவர் அல்லது முஸ்லிம் அல்லாத மக்களுக்கான புதிய தேசிய மதமாக அழைக்கப்படும் தங்கள் சொந்த இயக்கத்தை உருவாக்கினர். காந்தி தன்னை ஒரு ‘சனாதனி இந்து’ என அடையாளப்படுத்திக் கொண்டார்.

‘சனாதன தர்மம்’ என்ற பதம் சில இந்து தேசியவாதிகளின் தெரிவு. அவர்கள் ‘இந்து’ என்பது ஒரு பாரசீக மொழி என்றும் இதனால் ஒரு ‘மிலேச்ச’ வார்த்தை என்பதாலும் தங்களது திட்டங்களை பாதிக்காமல் அதனை நீக்குவதை விரும்பினார்கள். இந்தியவியலாளரான வில்ஹெல்ம் ஹல்ப்பாஸின் கூற்றுப்படி “தர்மம் என்பது முதன்மையாக வர்ணாஸ்ரதம தர்மம் அல்லது சாதிகளின் வரிசை மற்றும் வாழ்க்கையின் நிலைகள். தர்மம் சாதிகளை ஒன்றிலிருந்து மற்றொன்று வேறுபடுத்தி ‘ஆரியன், ஆரியன் அல்லாதது என்ற கோட்டை வரைகிறது.”

மேற்கத்திய நாடுகளுடனான அவர்களின் சந்திப்பிலும் மிஷனரிகளுடனான போட்டியிலும் மட்டுமே உயர்சாதியினர் மேற்கத்திய தரங்களுக்கு ஒப்பாக மதிப்பிடுவதற்காக தர்மத்தை தார்மீக மற்றும் நெறிமுறை அடிப்படையில் மறுவிளக்கம் செய்து தங்கள் சமூக மேலாதிக்கத்தை நிலை நாட்டினர். எனவே ‘சனாதன தர்மம் என்பது கிறிஸ்துவத்திற்கு எதிரான சுய உறுதிப்பாட்டின் கருத்தாகும்’ என்று ஹல்ப்பாஸ் கூறுகிறார்.

துணைக்கண்டத்தின் உயர் சாதியினரை விட எண்ணிக்கையில் அதிகமாக இருந்த ஒடுக்கப்பட்ட சாதியினர் காலனித்துவத்தை வித்தியாசமாக எதிர்கொண்டனர். முதமாற்றம், பாகுபாடுகளுக்கு எதிரான சட்டபூர்வ வழிமுறைமை, ஜனநாயக தேர்தல் செயல்முறைகள், கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கள் என காலனித்துவம் அவர்களுக்கு விடுதலை வழங்கியுள்ளதை உணர்ந்தனர். எல்லோரையும் போல ஒரே தெருவில் நடக்க உரிமை, கிராமத்து கிணற்றில் தண்ணீர் குடிக்கும் உரிமை மற்றும் அவர்களின் உழைப்புக்கு இழப்பீடு கேட்கும் உரிமை என முதன்முறையாக சம உரிமைகளை கோர சுதந்திரம் கொடுக்கப்பட்டது.

சிறுபான்மை உயர்சாதியினர் ஒடுக்கப்பட்ட சாதியினரை தீண்டத்தகாதவர்களாக கருதினாலும் அவர்கள் சாதிப்படிநிலையை அங்கீகரித்து பாரம்பரியமாக அவர்களுக்கு ஒத்துழைக்கப்பட்ட உழைப்பை தரவேண்டும் என விரும்பினர். காலனித்துவத்தின் கீழ் தமக்கு வழங்கப்பட்ட அதிஷ்டத்தை கைப்பற்றுவதற்கு ஒடுக்கப்பட்டசாதி பெரும்பான்மையினர் மேற்கொண்ட முயற்சிகள் இந்திய வரலாற்றில் அரிதாகவே காணப்படுகின்றன. காலனித்துவ சட்டத்தின் கீழ் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் ஒடுக்கப்பட்ட சாதிகள் அரசியல் விழிப்புணர்வுத் திட்டங்கள், கல்வி இயக்கங்கள் மற்றும் சமூக சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் சென்றன.

ஒடுக்கப்பட்ட சமூகங்களான பறையர், வங்காளத்தில் உள்ள நமசூத்திரர்கள் மற்றும் மஹாரஷ்டிராவில் உள்ள மஹர்கள் போன்ற சமூகங்களுக்கு, ஆங்கிலேய இந்திய இராணுவம் சாதிய தொழில்களுக்கு அப்பாற்பட்ட தொழில் வாய்ப்புகளை வழங்கியது. மஹர் சமூகத்தை சேர்ந்த பி.ஆர் அம்பேத்கரின் தந்தை மற்றும் தாத்தா இருவரும் பிரித்தானிய இராணுவத்தில் பணியாற்றியவர்கள்.

சாதி ஊனமுற்றோர் அகற்றும் சட்டம் கூறுவது போல மதமாற்றங்கள் துணைக்கண்டம் முழுவதும் பரவலாக இருந்தன. எதிர்பாரத்தவாறு அன்றும் இன்றும் மதமாற்றம் என்பது அவர்களின் ஆதிக்கத்திற்கு எதிரான அச்சுறுத்தலாக உயர்சாதியினரால் பார்க்கப்பட்டது. பல இந்திய மாநிலங்களில் இன்றும் மதமாற்றங்களை கட்டுப்படுத்த சட்டங்கள் உள்ளன.

1840 மற்றும் 1850 இற்கு இடையில் சென்னை மாகாண உயர்சாதியினர் மதமாற்றங்களை தடுக்க விபூதி சங்கம் அல்லது புனித-சாம்பல் சங்கம் மற்றும் சது வேத சித்தாந்த சபை அல்லது வேதங்களின் இறையியலை பரப்புவதற்கான சமூகம் என்று இரண்டு கூலிப்படை அமைப்புகளை உருவாக்கினர். சென்னை மாகாணம் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு எதிரான தாக்குதல்களையும் படுகொலைகளையும் செய்தனர். இன்றுவரை உயர்சாதி அமைப்புகள் மத மாற்றங்களை வன்முறையால் பலிவாங்குகின்றன. உதாரணமாக பெருந்திரளான மதமாற்றங்களை மேற்கொண்ட நாடார் சமூகம் வன்முறைகளை எதிர்கொண்டது. இந்த நிகழ்வுகள் சாதி ஊனமுற்றோர் அகற்றும் சட்டத்தை இயற்ற ஆங்கிலேயர்களை கட்டாயப்படுத்தியது.

காலனித்துவம் நவீன கல்வி வாய்ப்புகளை வழங்கியது. அதுவரை துணைக்கண்டத்தில் இருந்த ஒரே கல்வி முறைமை ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு தடை செய்யப்பட்ட பிராமண வேதங்கள் மற்றும் சடங்குகளுக்கான இசைக்கருவிகள் ஆகியவற்றை மையப்படுத்தி அமைந்திருந்தது. அப்போது பிராமணர் அல்லாத பிரிவுகளின் கருத்துகள் புறக்கணிக்கப்பட்டன. விஞ்ஞானம், ஆங்கில மொழி, நவீன நீதியியல் மற்றும் முன்னேற்றக் கருத்துக்கள் அடிப்படையில் காலனித்துவம் அறிமுகப்படுத்திய துறைகள். வேதங்கள், தர்மசாஸ்திரங்கள், சமஸ்கிருதம், மற்றும் சாதிய ஒழுங்கின் அடிப்படையில் இருந்த உயர் சாதியினரின் பழைய கல்வித்துறைகளை விட்டுவிட்டு புதிய கல்வித்துறையில் இடம்பிடிக்க ஆரம்பித்தனர்.

காலனித்துவ மற்றும் மிஷனரி கல்வியின் ஒரு முக்கிய தயாரிப்பு ஜோதிராவ் புலே. அவர் 1827இல் மகாராஷ்டிராவில் ஒடுக்கப்பட்ட மாலி சாதியில் பிறந்தார். பாரம்பரியமான தோட்டக்கலையில் ஈடுபட்டார். புலே புனேயில் உள்ள ஸ்காட்டிஷ் மிஷன் உயர்நிலைப்பள்ளியில் ஆங்கிப் பள்ளிக்கல்வியைப் பெற்றார். காலனித்துவ ஆட்சியால் சாதிய ஒழுங்கில் அறிமுகப்படுத்தப்பட்ட வரலாற்றுச்சிதைவு ஒரு புரட்சிகர நிகழ்வு என அவர் விபரித்தார். ‘மகாராஷ்டிர பிராமணர்களிடமிருந்து நம்மை மீட்டெடுத்த ஆங்கிலேயர்களை எந்த முட்டாள்கள் விரட்ட முனைந்தார்கள். ஆவர்களின் கிளர்ச்சியை அடக்க ஆங்கிலேயர்களுக்கு உதவியதற்காக கடவுளுக்கு நன்றி’ என்று புலே எழுதினார்.

புலேயின் முற்போக்கான விவாதமானது ‘ஆரிய’ போதனைகளை அதன் ஆதரவாளர்களுக்கு எதிராக மாற்றியது. திலக் இவர்களில் குறிப்பிடத்தக்கவர். இந்தியாவின் பிரதிநிதிகள் மற்றும் தலைவர்களை விட உயர்சாதி ‘ஆரியர்கள்’ அடக்குமுறையாளர்கள் என்று புலே வலியுறுத்தினார். ஆரிய குடியேற்றக் கோட்பாட்டை ஆரியர்கள் இந்தியப்பழங்குடி மக்களைக் கைப்பற்றிய ஒரு வெளிப்புற சக்தியாக அவர் விபரித்தார். ஆரியர்களை இன ரீதியாக உயர்ந்த, நாகரீக சக்தியாக அல்லாமல் காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறையாளர்களாக விளக்கினார். ஆரியர்கள் இந்தியாவைக் கைப்பற்றியதன் அடையாளமாக ராமரைக் கண்டது மட்டுமன்றி வேதங்களின் கருத்துகளையும் தாக்கி பேசினார். அவரது மனைவி சாவித்ரிபாயுடன் சேர்ந்து இந்தியாவின் ஒடுக்கப்பட்ட சமூகங்களான தலித்துகள், சூத்திரர்கள் மற்றும் பெண்களின் கல்வியை ஆதரவளித்தார். சாதி மற்றும் பழமைவாதத்தின் அனைத்து வடிவங்களுக்கும் எதிரான அவரது அறிவுசார் நிறுவனப்பணியின் மூலம் துணைக்கண்டத்தில் ஒரு உண்மையான சமூகப் புரட்சியின் பிறப்பு மற்றும் வளர்ச்சிக்கு அவர் தலைமை தாங்கினார்.

பூலேயின் சத்யசோதக் சமாஜ், உயர்சாதி பிரார்த்தனா சமாஜக்கு பிறகு ஆரம்பகால சமூக சீர்திருத்த அமைப்பாகவும், ஆர்யசமாஜடன் சமகாலத்திலும் இருந்தது. இது இந்திய தேசிய காங்கிரஸக்கு முந்தியது மட்டுமன்றி காங்கிஸுடன் சமகாலத்தில் வெகுஜன இயக்கமாக மாறியது. 1875இல் சத்யசோதகர்கள் ‘Din Bandhu’ என்ற பத்திரிகையை நிறுவினர்.

பிராமண தேசியவாதத்தின் மிகவும் பிரபலமான அடையாளமான திலக், புலேவின் எதிர்ப்பாளராக ஆனார். 1881இல் திலக் கேசரி என்ற பத்திரிகையை தொடங்கினார். ஜோதிபா மற்றும் சாவித்ரிபாய் ஆகியோர் பெண் கல்வி மற்றும் சமத்துவத்தை முன்னிறுத்துபவர்களாக இருந்தபோது திலக் பெண்களுக்கு பொதுஇடங்களை மறுப்பது ‘இந்துத்துவத்திற்கு’ இன்றியமையாதது என்று அறிவித்தார். 11 வயது சிறுமி ஒருவரின் கணவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட போது, ‘அவளது வயது முதிர்ந்த கணவருடன் உடலுறவின் போது ஏற்பட்ட காயங்களால் அவள் இறந்துவிட்டாள்’ என்று கல்வியலாளர் டோரதி எம் பிகுவோரா எழுதுகிறார். திலக் அந்த மனிதரை பாதுகாத்தது மட்டுமன்றி பாலுறவு சம்மத வயதை உயர்த்துவதை மறுத்து அச்சிறுமியை குறைபாடுள்ளவராகவும் ‘இயற்கையிலே ஒரு ஆபத்தான மனநோயாளர்’ என்ற கருத்தில் குற்றம் சாட்டினார். அறிஞர் பரிமளா ராவ் 2008ஆம் ஆண்டு எழுதிய ‘ரக்மாபாய் மற்றும் ரமாபாய் பற்றிய திலக்கின் விமர்சனம்;’ என்ற கட்டுரையில் ‘இந்து மதம் அனைத்து நடைமுறை நோக்கங்களுக்காகவும் பெண்களை கீழ்நிலையில் பார்க்கும் வர்ணாஷ்ரமதர்மமாக இருந்தது. இதை மாற்றுவதற்கான எந்த ஒரு முயற்சியும் அச்சுறுதல்களாக கருதப்பட்டன.’ என எழுதினார். ராவின் கருத்துப்படி ஒரு ஹிந்துப் பெண்ணை கீழ்ப்படிவுள்ள மருமகளாக விவரிக்கும் திலக்கின் கூற்று ‘விடுதலை பெற்ற மற்றும் படித்த பெண்களின் சீர்திருத்த கட்டமைப்பிற்கு முற்றிலும் எதிரானது. எனவே காலனித்துவ ஆட்சி மீதான தேசியவாத விமர்சனம் ஆணாதிக்க மற்றும் சாதிய நலன்களால் தூண்டப்பட்டது.’

பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து, இந்தியாவில் சாதியின்படி ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் பிராமணர்களால் வழிநடத்தப்படும் ஒரு சமூக வடிவத்தை உருவாக்குவதற்கான ஒவ்வொரு முயற்சியையும் பூலே சவால் செய்தார். 1818ஆம் ஆண்டு முதல் அதிகரித்து வரும் ஒடுக்கப்பட்ட சாதியினரின் சவாலுக்கு எதிராக உயர்சாதியினரின் அதிகாரத்தை தக்கவைக்க முயன்ற மறுமலர்ச்சி அமைப்புகளின் முன்னிலையில் பிராமணர்கள் இருந்தனர். மேற்கிந்தியாவில் கால் பதிக்க முயன்ற பிரம்ம சமாஜ் மற்றும் பிரார்த்தனா சமாஜ் போன்ற பிராமண ஆதிக்கம் செலுத்தப்படும் மறுமலர்ச்சி அமைப்புகளையும் குறிப்பாக இந்து மகாசபாவையும் சவாலுக்கு உற்படுத்தி பூலே வெற்றியடைந்தார். மகாராஷ்டிராவில் பிராமணரல்லாத இயக்கத்தை வழிநடத்தும் போன்ஸ்லே வம்சத்தின் ஷாஹு, கேசவ்ராவ் ஜெட்டே மற்றும் தினகர்ராவ் ஜவல்கர் போன்ற தலைவர்களை பூலே செல்வாக்கு செலுத்தினார்.

வரலாற்றாசிரியர் ரோசாலிண்ட் ஓ ஹன்லோன் 1985இல் எழுதியபடி ‘கடந்த காலத்தின் மறுவிளக்கங்கள், வலுவான அடையாளங்கள் மற்றும் இந்த அடையாளத்தின் கருத்தியல் உட்பொருளை உருவாக்கும் தெளிவான உருவகங்கள் ஆகியவற்றை கிட்டத்தட்ட தனித்தனியாக வழங்கியவர் பூலே. அதன் தன்னறிவு, மகாராஷ்டிராவின் வரலாறு மற்றும் பரந்த கலாசார மரபுகளில் ஒரு தனித்துவமான பாத்திரம் மற்றும் பிராமணரலல்லாத சமூகக்குழுக்களின் பரந்த அளவிலான ஒருங்கிணைக்கும் திறன் ஆகியவற்றுடன் இந்த அடையாளம் பண்டைய சமூக மற்றும் கலாச்சார வடிவங்களில் இருந்து ஒரு திடுக்கிடும் புதிய விலகலை பிரதிநிதித்துவப்படுத்தியது. மற்றும் அதன் சொந்த வழிமுறையில் தீவிர சமூக சீர்திருத்தத்தின் கருவியாக இருக்கவேண்டியது.’ கேரளாவில் ஐயன்காளி மற்றும் சகோதரன் ஐயப்பன் ஒடுக்கப்பட்டசாதியினரின் முக்கிய தலைவர்களாக உருவெடுத்தனர். ஐயபப்பன் தேசியவாத இயக்கத்தை ஒரு உயர்சாதி திட்டம் என்று கண்டனம் செய்தார். ‘தேசியவாதம் ஒரு மோசடி மற்றும் உயர்சாதி மேலாதிக்கத்தை ஆதரிக்கும் உத்தி என்பதால் நான் ஒரு தேசியவாதியாக இருப்பதில் வெட்கப்படுகிறேன்’ என்று கூறினார்.

பிராமணரல்லாத இயக்கம் சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சியின் வடிவத்தை எடுத்தது. இது திராவிட இயக்கத்திற்கு முன்னோடியாக இருந்தது. திராவிட இயக்கம் ‘இந்து’ உருவாக்கத்தை இந்திய துணைக்கண்டத்தின் பலதரப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான உயர்சாதி ‘ஆரிய’ திணிப்பாக கண்டது. பொதுவாக பெரியார் என்று அழைக்கப்படும் ஈ.வி ராமசாமியின் கீழ் இந்த இயக்கம் பிராமணியத்திற்கும் மதத்திற்கும் எதிராக செயற்பட்டது. இது அடுத்த நூற்றாண்டின் மாநில அரசியலை வடிவமைத்தது. ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் புத்திஜீவிகளின்; காலனித்துவத்துடனான இணைப்பின் திடுக்கிடும் புதுமையான கண்ணோட்டங்கள் போதுமான கவனத்தை அடையவில்லை. மேலும் அவர்களின் வரலாறுகள் நவீன காலத்தின் அரசியல் புரிதலில் புறநிலையாக மாற்றப்பட்டுள்ளன.

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சாதிய ஒடுக்குமுறையும், சாதிகளின் மக்கள்தொகை அதிகரிப்பும் அரசியலில் மையப்பிரச்சினையாக மாறியது. சிறுபான்மையினராக இருந்ததால் உயர்சாதியினர் முன்னரில்லாத வகையில் பின்னடைவை சந்தித்தனர். அக்காலப்பகுதியில் ஒரு மதம் அடையாளப்படுத்தப்படுவதற்கு அது அரசால் அங்கீகரிக்கப்பட வேண்டும் மற்றும் ஒரு பரந்த மக்கள் கூட்டத்தின் ‘ஆன்மீக வாழ்க்கையை’ உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். காலனித்துவ நிர்வாகத்தின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைகளுடன் ‘இந்து’ மதம் உயிர்கொண்டு அரசின் கணக்கீட்டு வகையறைகளுக்குள் நுழைந்தது.

1872 முதல் பிரித்தானிய அதிகாரிகள் கூட உடன்பட்டிருக்காத ‘இந்து’ என்ற சொல் துணைக்கண்டத்தின் மக்களை வகைப்படுத்த கணக்கெடுப்பு நடவடிக்கைகளில் பயன்படுத்தப்பட்டது. கணக்கெடுக்கப்பட்ட மக்களுக்கு பௌத்தம், கிறிஸ்தவம், இந்து, முஸ்லிம் மற்றும் பிற மதங்கள் என்பன மதத் தெரிவுகளாக வழங்கப்பட்டன. மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் துணைக்கண்டத்தில் உள்ள மத நடைமுறைகளில் உள்ள மாறுபாடுகளை அறிந்திருந்தனர். மேலும் பெரும்பாலான இந்தியர்கள் தங்கள் மதத்தை தெரிவு செய்யுமாறு கேட்கப்பட்ட போது அவர்களின் ஜாதி அல்லது உள்ளுர் சமூகத்தை பெயரிட்டதை கண்டு அதிகாரிகள் திகைப்படந்தனர்.

இந்துக்களை அடையாளம் காண்பதற்காக கணக்கெடுப்பாளர்கள் அளவுகோல் பட்டியல்களை அமைதத்தனர். ஆனால் அனைத்து மாகாணங்களில் இருந்தும் பெறப்பட்ட பதில்கள், நம்பிக்கை முறைகள், வழிபாட்டு முறைகள் மற்றும் சுய அடையாளங்களின் பன்முகத்தன்மையால் ஒருங்கிணைக்கப்பட ஒரு மதத்தை உருவாக்கியது என்ற அவர்களது முன்னைய அனுமானத்தை பொய்யாக்கியது. கிழக்கின் ‘இந்துக்கள்’ இறைச்சியை விட காய்கறிகளை விரும்பினர். ஆனால் மற்ற இடங்களில் அவர்கள் கண்மூடித்தனமாக இறைச்சி உண்பவர்களாக இருந்தனர். சிலர் ஒரு கடவுளிடம் பிரார்த்தனை செய்தனர். வேறு சிலர் பல கடவுள்களிடம் வேண்டினர். சிலரால் பிராமண அர்ச்சகர்களை அணுக முடிந்தது. சிலருக்கு தமது சாதியைச் சேர்ந்த பூசாரிகள் இருந்தனர். வேறு சிலருக்கு அர்ச்சர்கள் தேவைப்படவில்லை. சில ‘இந்துக்கள்’ மரித்தவர்களை அடக்கம் செய்தனர். சிலர் எரித்தனர். சில ‘இந்துக்கள்’ ஒரு சில ‘இந்து’ கடவுள்களை புனிதமற்றதாக கருதினர். மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்கள் இது அசாதாரண எண்ணிக்கையிலான மதப்பிரிவுகளை உண்டாக்கி சாதி பிரிவுகளை போலாகிவிடும் என கவலையடைந்தனர். இந்த அளவுகோல் பட்டியல்கள் பிராமண கண்ணோட்டத்தில் உருவானவை. இந்துக்களை அடையாளப்படுத்தும் அளவுகோல்களை சுருக்கமாக விபரித்தால் பெரும்பாலான எண்ணிக்கையான மக்கள் ‘இந்து’ என்பதற்கு பதிலாக பிற மதப்பிரிவில் சேர்க்கப்பட்டனர். மக்கள் தொகை கணக்கெடுப்பில் பதிலளித்த கணிசமான மக்களால் பல்வேறு மதங்கள் வெளிவரத்தொடங்கின. உதாரணமாக மைசூர் மக்கள் தொகை கணக்கெடுப்பு சைவர்கள், மதவச்சாரிகள், லிங்காயத்துகள், சுவாமி நாராயணர்கள்;, ராமானுஜங்கள், வல்லபாச்சார்யர்கள், பிரிஜ்மார்கிஸ், மற்றும் கபீர் பந்திஸ் ஆகியோர் இருப்பதை வெளிப்படுத்தியது. கூர்க் மாநில மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மக்கள் தங்களை ‘இந்து’ என்பதை விட ஷ்ரீவைஷ்ணவர், விஷ்ணுவைட், ஜெய்ன், பௌத்தர், கூர்க்குகள், பிராமணர், ஸ்மார்த்தர் மற்றும் சிவியர்கள் என்று அடையாளப்படுத்திக் கொண்டனர்.

எனவே உண்மையான இந்து யார் என்பதை சரியாக வரையறுக்க முடியவில்லை என உணர்ந்தும் அதிகாரிகள் இந்த வார்த்தையை தொடர்ந்தும் பயன்படுத்தினர். ஆயினும்கூட 1872ஆம் ஆண்டின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தனித்துவமான பண்புகள் மற்றும் உறுதியாக கூறக்கூடிய மக்கள் குழு என்பவற்றை கொண்ட ஒரு மதப்பிரிவாக கருதப்படுவதில் ‘இந்து’ தோல்வியடைந்ததாக கருதப்பட்டது. 1872ஆம் ஆண்டு வங்காள மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கையில் ஹென்றி பெவர்லியின் கூற்றுப்படிஇ ‘இந்து’ என்ற சொல் முகமதியர் அல்லாதவர் என்ற எளிய பொருளில் பயன்படுத்தப்படுகிறது என்பதை அவர்கள் ஒப்புக்கொண்டனர். ‘இந்து’ என்ற சொல் ஒரு நல்ல எதிர்மறையான சொல்லாக இருந்தமையால் அதிகாரிகளுக்கு இலகுவாக அமைந்தது.

எதிர்மறைக் கருத்துகள், ஒன்றை ஏதோ ஒரு வகையல்ல என்பதைக் குறிப்பிட பயன்படுவதை தவிர வேறு எந்த முறையிலும் பயனளிக்காது. உதாரணமாக ஒரு பசுவை ‘N-Cow’ என குறிப்பிட்டால் ‘N-Cow’ அல்லாதவை புத்தகங்கள், விண்மீண்கள், மாட்டுசாணம் மற்றும் பீட்ல்ஸ் என கூறலாம். எதிர்மறையான கருத்தாக, கிறிஸ்தவர்கள், யூதர்கள், அல்லது முஸ்லிம்கள் அல்லாதவர்களை குறிப்பதற்காக ‘இந்து’ பயன்படுத்தப்பட்டது. இருப்பினும் இன்றுவரை இந்த குழுவிற்கு ஒரு பொதுவான பண்பை கண்டுபிடிக்க முடியவில்லை. எந்த ஒரு வாழ்க்கை களமும் சட்டத்தின்கீழ் சரியாக வரையறுக்கப்படவில்லை என்றால் அது பின்சேர்க்கப்படலாம் என்பதன் அடிப்படையில் இந்துத்துவ விரிவாக்கத்தை நோக்கிய தற்கால ஈர்ப்பின் எதிர்மறைக் கருத்தின் அசாதாரண சக்தியை நாம் காணலாம்.

அடுத்தடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்புகள் நிலைமையை மாற்றவில்லை. 2005ஆம் ஆண்டு ஒரு கட்டுரையில் சமூகவியலாளர் மைக்கேல் ஹான், 1881ஆம் ஆண்டு பஞ்சாப் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையாளர் டென்ஸில் இப்லெஸ்டன் ‘இந்து’ என்ற பதத்தின் அர்த்தமற்ற தன்மையை கண்டனம் செய்ததை மேற்கோள் காட்டுகிறார்.

‘சமவெளி இந்துக்கள் தங்கள் அண்டைநாட்டு முஸ்லிம்களின் புனிதர்களை வணங்கினர், மலைகளில் வசித்த இந்துக்கள் தங்கள் ஆதிவாசிகளின் சாத்தான்களையும் தெய்வங்களையும் வணங்கினர், மற்றும் விவசாயிகளின் தெய்வங்கள் தூய்மையான தூய்மையற்ற வகுப்புகளாக பிரிக்கப்பட்டன. இந்துக்களின் பெரும்பாலான கடவுள்கள் கண்டிப்பான ஒரு பிராந்தியத்திற்கு உட்பட்டு வழிபடப்பட்டனர்.’

இது ஒரு மத்தை பிரதிநிதித்துவப்படுத்தாமல் பிற மதப்பிரிவுகளுக்குள் அனுமதிக்கப்படாத நெகிழ்வுத்தனமையின் மூலம் பரந்த அளவிலான மக்கள் கூட்டத்தை உள்ளடக்கியுள்ளது என அறிந்தும், அதிகாரிகள் இந்த வகையை முஸ்லிம் அல்லது கிறிஸ்தவர் அல்லது பௌத்தர் அல்லாதவர்கள் மீது திணித்தனர்.

1890களில் பல உயர்சாதி இந்தியர்கள் இந்த புதிய மதம் தங்களை அடையாளப்படுத்த பயன்படுவதை அறிந்துகொண்டனர். ஆர்ய சமாஜ் தனது நாளிதழில் இந்த மிலேச்ச சொல்லுக்கு எதிராக ஒரு பிரச்சாரத்தை நடத்தி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைகளில் இருந்து அதை நீக்கக் கோரியது. ‘இந்து’ என்பது உறுதியாக ஒரு மக்கள் குழுவுடன் அடையாளம் காண முடியாத இந்தியர்களுக்கு வழங்கப்பட்ட ஒரு இழிவான பதம் என்பதை ஆர்ய சமாஜ் சரியாக புரிந்து கொண்டது.

‘இந்து’ பற்றிய ஆர்ய சமாஜத்தின் மனநிலையை மாற்றியமைத்து காங்கிரஸ் மற்றும் பிற அமைப்புகளின் உயர்சாதி தலைவர்களை அதன் பின்னால் அணிதிரட்ட வைக்க ஒரே காரணம் தாம் சிறுபான்மையினர் என்பது அம்பலப்பட்டு விடுவோம் என்பது. பிரித்தானிய காலனித்துவ நிர்வாகத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட தேர்தல் சீர்திருத்தங்கள் மற்றும் நவீன நீதித்துறை நடைமுறைகள் இல்லாமல் இருந்திருந்தால், உயர்சாதியினருக்கும் காங்கிரஸ் போன்ற அவர்களின் அமைப்புகளுக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளிவிபரங்கள் முக்கியமாக இருந்திருக்காது.

திவ்யா துவேதி – இந்தியாவை தளமாகக் கொண்டு இயங்கும் ஒரு தத்துவ எழுத்தாளர், இவர் ஷாஜ் மோகன்னுடன் இணைந்து Gandhi and Philosophy: On Theological Anti-politics, Indian Philosophy, Indian Revolution :On Caste and Politics என்ற இரண்டு புத்தகத்தை எழுதி இருக்கிறார்.

ஷாஜ் மோகன் – தத்துவம்,மீமெய்யியல், தொழிநுற்பம் மற்றும் அரசியல் ஆகிய பரப்புகளில் தனது ஆய்வுகளை மேற்கொள்ளுகிறார். இவர் திவ்யா தவிவெடியுடன் இணைந்து Gandhi and Philosophy: On Theological Anti-politics, Indian Philosophy, Indian Revolution :On Caste and Politics என்ற இரண்டு புத்தகத்தை எழுதி இருக்கிறார்.

ஜே ரெகு – கேரளாவைச் சேர்ந்த அரசியல் கோட்பாட்டாளர். இவருடைய ஆய்வுப் புலமாக சாதி, அரசியல் கட்டமைப்புகளின் உருவாக்கம் இருக்கிறது. இவர் ஆரம்பகால இந்திய பெண்ணிய எழுத்துக்களை மலையாளத்துக்கு மொழிபெயர்த்து இருக்கிறார்.

மொழிபெயர்ப்பு – நாஸிரா நஸ்ருதீன்

நாஸிரா நஸ்ருதீன் – ஒரு தொழில்முறை மென்பொருள் பொறியியலாளர். முராகாமி முதல் சில்வியா பிளாத் வரை இலக்கியத்தில் ஆழ்ந்த ஆர்வம் கொண்டவர். இவரது சில மொழிபெயர்ப்புகள் சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன.